புத்திசாலித்தனத்தைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்
புத்திசாலித்தனத்தைப் பற்றிய பொன்மொழிகள்
சிந்தனையே புத்திசாலித்தனத்துக்கான அடித்தளம் ஆனால் இன்றைய கல்வி முறையும் தொழில்நுட்பமும் நாம் சிந்திக்க வேண்டிய தேவையை குறைத்துவிட்டன. இன்றைய கல்வி முறை நம்மை வெறும் தகவல்களை சேமித்து வைக்கும் நினைவக கருவிகளாக மட்டுமே தயார் செய்கின்றன. தொழில்நுட்பம் அதன் தேவையைக் கூட இல்லாமல் செய்துவிடுகிறது. இதனால் நாம் சிந்திக்கும் தேவை குறைந்துவிடுகிறது. நாம் சிந்திப்பது குறைந்ததால், நம் புத்திசாலித்தனமும் குறைந்துகொண்டே செல்கிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயந்திரங்களின் புத்திசாலித்தனம் (intelligence) அதிகரித்துச் செல்லும் அதே வேளை, சிந்திக்க வேண்டிய தேவை குறைந்ததால், மனிதனின் புத்திசாலித்தனம் குறைந்துகொண்டே செல்கிறது. பலர் அறிவையும் புத்திசாலித்தனத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பதில் குழப்பமாகவே உள்ளார்கள். அறிவு என்பது கல்வியின் மூலமோ அல்லது அனுபவத்தின் மூலமோ நாம் பெற்றுக்கொள்வது. ஆனால் புத்திசாலித்தனம் என்பது பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றலாகும்.
எடிசன் மின்குமிழைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது, அவர் கண்டுபிடிக்கும் மின்குமிழில் பயன்படுத்தும் இழைகள் அனைத்துமே கொஞ்ச நேரத்திலேயே எரிந்து சாம்பலாயின. இதனால் நீண்ட நேரம் எரியக்கூடிய மின்குமிழைக் கண்டுபிடிப்பதில் தொடர்ந்து தோல்வியடைந்துகொண்டிருந்தார். காற்றில் உள்ள ஒட்சிசன் வாயுவால் இழைகள் கொஞ்ச நேரத்திலேயே எரிந்து சாம்பலாகின்றன என்பதை அறிந்த எடிசன், இழையை ஒரு கண்ணாடிக் குமிழுக்குள் அடைத்து அதன் உள் இருந்த எரியக்கூடிய வாயுவான ஒட்சிசனை எடுத்துவிட்டு தீப்பற்ற முடியாத வாயுவை அடைத்து மின்குமிழை எரியவிட்டார் அது தொடர்ந்து நீண்ட நேரம் எரிந்தது.
இதுவே புத்திசாலித்தனத்துக்கான எடுத்துக்காட்டு, காற்றில் உள்ள ஒட்சிசன் வாயுவால் இழைகள் எரிந்து சாம்பலாகின்றன. காற்றில் ஒட்சிசன் இருப்பதால் தொடர்ந்து எரியக்கூடிய மின்குமிழைக் கண்டுபிடிப்பது சாத்தியமற்றது என்று எடிசன் நினைக்கவில்லை. அவர் தனது புத்திசாலித்தனத்தால் இழையை கண்ணாடிக் குமிழுக்குள் அடைத்து உள் இருந்த ஒட்சிசன் வாயுவை நீக்கிவிட்டார். இதுவே பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஆற்றல். ஒன்றை அதிகமாகப் பயன்படுத்தினால் அதன் ஆற்றல் அதிகரிக்கும். எனவே நம் புத்தியையும் அடிக்கடி பயன்படுத்தி நீங்களும் ஒரு சாதனையாளராக மாற என் வாழ்த்துக்கள்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Intelligence quotes in Tamil
- ஒன்றை மதிப்பீடு செய்யாமல் அதை அவதானிக்கும் திறன் புத்திசாலித்தனத்தின் மிக உயர்ந்த வடிவமாகும். --ஜித்து கிருஷ்ணமூர்த்தி
- இலட்சியம் இல்லாத புத்திசாலித்தனம் என்பது சிறகுகள் இல்லாத பறவை போன்றது. --சால்வடார் டாலி
- முட்டாள்கள் புத்திசாலிகளை முட்டாள்கள் என்று அழைக்கிறார்கள். ஒரு புத்திசாலி எந்த மனிதனையும் முட்டாள் என்று அழைக்க மாட்டான். --தாமஸ் அல்வா எடிசன்
- உண்மையான புத்திசாலிகளைப் பற்றிய நல்ல விடயம் என்னவென்றால், நீங்கள் அவர்களுடன் பேசும்போது அவர்கள் உங்களையும் புத்திசாலிகளாக உணர வைக்கிறார்கள். --ஆன் மோரோ லிண்ட்பெர்க்
- புத்திசாலிகளுக்கான அடையாளம் அவர்கள் தங்கள் உணர்வுகளை பகுத்தறிவின் மூலம் கட்டுப்படுத்தும் திறன் ஆகும். --மரியா மேன்னஸ்
- ஒரு புத்திசாலி, புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்ட பிறகு, தனது முதல் பாடத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் வரை, மேலும் எதையாவது கற்றுக்கொள்வதற்குப் பயப்படுகிறார். --லாவோ சீ
- ஒரு புத்திசாலி சரியான பதில்களைத் தருவதில்லை, அவர் சரியான கேள்விகளை எழுப்புகிறார். --கிளாட் லெவி-ஸ்ட்ராஸ்
- ஒருவரின் சொந்த அறியாமையைப் பற்றிய விழிப்புணர்வே புத்திசாலித்தனத்தின் அடையாளமாகும். --நிக்கோலோ மச்சியாவெல்லி
- ஒரு முட்டாள் தான் ஒரு புத்திசாலி என்று நினைக்கிறான், ஆனால் ஒரு புத்திசாலிக்கு தான் ஒரு முட்டாள் என்று தெரியும். --வில்லியம் ஷேக்ஸ்பியர்
- புத்திசாலித்தனத்தின் உண்மையான அடையாளம் அறிவு அல்ல கற்பனை. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- வேலைக்கு ஆட்களைத் தேடும்போது, இந்த மூன்று குணங்களைப் பாருங்கள்: நேர்மை, புத்திசாலித்தனம் மற்றும் ஆற்றல். அவர்களிடம் முதலாவது இல்லையென்றால், மற்ற இரண்டும் உங்களைக் கொன்றுவிடும். --வாரன் பஃபெட்
- ஞானத்தைத் தேடுபவர் ஒரு புத்திசாலி, அதைக் கண்டறிந்ததாக நினைப்பவர் ஒரு பைத்தியம். --செனிக்கா
- நீங்கள் ஒரு புத்திசாலி என்று நிரூபிக்க நிறைய விடயங்கள் தேவை, ஆனால் நீங்கள் ஒரு முட்டாள் என்று நிரூபிக்க ஒரே ஒரு விடயம் போதும். --டான் ஹெரால்ட்
- செயலே புத்திசாலித்தனத்தின் உண்மையான அளவுகோல். --நெப்போலியன் ஹில்
- உங்களுக்குத் தெரியாவிட்டால், கேளுங்கள். அந்தக் கணத்தில் நீங்கள் ஒரு முட்டாளாக இருப்பீர்கள், ஆனால் உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு புத்திசாலியாக இருப்பீர்கள். --செனிக்கா
- நமது புத்திசாலித்தனத்தை நல்லெண்ணத்துடன் வழிநடத்துவது முக்கியமாகும். புத்திசாலித்தனம் இல்லாமல், நம்மால் அதிகம் சாதிக்க முடியாது. நல்லெண்ணம் இல்லாமல், நம் புத்திசாலித்தனத்தை நாம் பயன்படுத்தும் விதம் அழிவுகரமான முடிவுகளைக் கொண்டிருக்கலாம். --தலாய் லாமா
- ஒரு புத்திசாலி பல சாதனைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்தவர், ஆயினுங்கூட மேலும் கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார். --எட் பார்க்கர்
- புத்திசாலித்தனமாகவும் மெதுவாகவும் செல்லுங்கள். வேகமாகச் செல்பவர்கள் தடுமாறி விழுந்துவிடுவார்கள். --வில்லியம் ஷேக்ஸ்பியர்
- நான் ஒரு புத்திசாலி இல்லை, ஆனால் நான் அவதானிக்க விரும்புகிறேன். மில்லியன் கணக்கானவர்கள் ஆப்பிள் விழுவதைக் கண்டார்கள், ஆனால் நியூட்டன் ஒருவரே ஏன் என்று கேட்டார். --வில்லியம் ஹஸ்லிட்
- ஒருவர் தனது விரக்தியை வெளிப்படுத்த போதுமான புத்திசாலித்தனமில்லாதபோது, அவர் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அவை புத்திசாலித்தனத்தின் பற்றாக்குறையை விவரிக்கும் வார்த்தைகள். புத்திசாலிகள் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை, ஏனெனில் அது அவர்களின் புத்திசாலித்தனத்தை அவமதிப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். --நௌமன் அலிகான்
- யார் புத்திசாலி? எல்லோரிடமிருந்தும் கற்றுக்கொள்பவர். --பெஞ்சமின் பிராங்க்ளின்
- இந்த பிரபஞ்சத்தில் வேறு எங்காவது புத்திசாலித்தனமான உயிரினங்கள் உள்ளது என்பதற்கான உறுதியான அறிகுறி என்னவென்றால், அவை நம்மைத் தொடர்பு கொள்ள முயன்றதில்லை. --பில் வாட்டர்சன்
- நான் உலகின் புத்திசாலித்தனமான மனிதன் அல்ல, ஆனால் என்னால் நிச்சயமாக புத்திசாலித்தனமான சக ஊழியர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். --பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்
- ஒரு புத்திசாலி பிரச்சினையைத் தீர்க்கிறான். ஞானமுள்ளவன் அதைத் தவிர்க்கிறான். --ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
- எப்பொழுதும் உங்கள் எதிரி உங்களை விட புத்திசாலி என்று கருதுங்கள். --வால்டர் ராதேனாவ்
- நான் ஒரு புத்திசாலி என்று எனக்குத் தெரியும், ஏனெனில் எனக்கு எதுவும் தெரியாது என்று எனக்குத் தெரியும். --சாக்ரடீஸ்
- புத்திசாலித்தனம் என்பது உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாத போது நீங்கள் பயன்படுத்துவது. --ஜீன் பியாஜெட்
- நான் ஒரு முட்டாள், ஆனால் நான் ஒரு முட்டாள் என்று எனக்குத் தெரியும், மேலும் அது என்னை உங்களை விட புத்திசாலி ஆக்குகிறது. --சாக்ரடீஸ்
- பலவீனமானவர்கள் பழிவாங்குகிறார்கள். வலிமையானவர்கள் மன்னிக்கிறார்கள். புத்திசாலிகள் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். --ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
- தண்ணீர் அதைக் கொண்டிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை வடிவமைப்பது போல, ஒரு புத்திசாலி சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்கிறான். --கன்பூசியஸ்
- நான் ஒரு உயிருள்ள புத்திசாலி மனிதன், ஏனென்றால் எனக்கு ஒரு விடயம் தெரியும், அது என்னவென்றால் எனக்கு எதுவும் தெரியாது. --பிளேட்டோ
- தனக்கு என்ன தெரியாது என்பதை அறிந்தவனே புத்திசாலி. --பிளேட்டோ
- ஒரு புத்திசாலி எப்பொழுதும் தன்னை விட சிறந்த ஒருவருடன் இருக்க விரும்புவார். --பிளேட்டோ
- புத்திசாலித்தனம் என்பது மாற்றத்திற்கு ஏற்ப மாறும் திறனாகும். --ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங்
- ஒரு மனிதன் தனது தவறுகளை ஒப்புக்கொள்ளும் அளவுக்கு பெரியவராக இருக்க வேண்டும், அவற்றிடமிருந்து நன்மை அடையும் அளவுக்கு புத்திசாலியாக இருக்க வேண்டும், மற்றும் அவற்றை சரிசெய்யும் அளவுக்கு வலிமையானவராக இருக்க வேண்டும். --ஜான் சி. மேக்ஸ்வெல்
- எனக்குத் தெரிந்த அரிதான விடயம் புத்திசாலிகளிடத்தில் மகிழ்ச்சி. --எர்னஸ்ட் ஹெமிங்வே
- புத்திசாலித்தனமாகச் செயல்படுவதற்கு புத்திசாலித்தனத்தைத் விட வேறு ஏதோ ஒன்று தேவை. --ஃபெடோர் தஸ்தாயெவ்ஸ்கி
- முதிர்ச்சியற்ற தன்மை என்பது வேறொருவரின் வழிகாட்டுதல் இல்லாமல் ஒருவர் தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்த முடியாமை ஆகும். --இம்மானுவேல் கான்ட்
- புத்திசாலித்தனம் மற்றும் நற்பண்பு இதுவே உண்மையான கல்வியின் குறிக்கோள். --மார்ட்டின் லூதர் கிங்
- முட்டாள்தனம் புத்திசாலித்தனத்தைக் காட்டிலும் மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது. புத்திசாலித்தனத்திற்கு அதன் எல்லைகள் உள்ளன, ஆனால் முட்டாள்தனத்திற்கு எல்லையில்லை. --கிளாட் சாப்ரோல்
- ஒரு புத்திசாலியால் தன் மனதை மாற்றிக்கொள்ள முடியும், பிடிவாத குணம் உள்ளவனால் ஒருபோதும் முடியாது. --இம்மானுவேல் கான்ட்
- அனைத்து புத்திசாலித்தனமான சிந்தனைகளும் ஏற்கனவே சிந்திக்கப்பட்டுவிட்டன, தேவையானது என்னவென்றால் அவற்றை மீண்டும் சிந்திக்க முயற்சிப்பது மட்டுமே. --ஜோஹன் வொல்ப்காங் வான் கோதே
- ஒரு முட்டாளின் தவறுகள் இந்த உலகிற்குத் தெரியும், ஆனால் அவனுக்குத் தெரியாது. ஒரு புத்திசாலியின் தவறுகள் அவனுக்குத் தெரியும், ஆனால் இந்த உலகத்திற்குத் தெரியாது. --சார்லஸ் காலேப் கால்டன்
- ஒன்றை யூகிப்பதை விட அடையாளம் காண்பது புத்திசாலித்தனமானது. --மார்க் ட்வைன்
- தனது புத்திசாலித்தனத்தைப் பற்றி பெருமைப்படும் ஒரு புத்திசாலி, தனது பெரிய சிறையைப் பற்றி பெருமைப்படும் ஒரு குற்றவாளியைப் போன்றவன். --சிமோன் வெயில்
- புத்திசாலித்தனத்தின் அளவுகோல் மாறும் திறனாகும். --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- நான் எவ்வளவு முட்டாள் என்று ஒருவன் நினைக்கிறான் என்பதை வைத்து, அவன் எவ்வளவு புத்திசாலி என்று என்னால் சொல்ல முடியும். --கோர்மக் மெக்கார்த்தி
- புத்திசாலித்தனம் என்பது ஞானம் அல்ல. --யூரிபிடிஸ்
- மக்கள் எதைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்பதை வைத்து, அவர்கள் எவ்வளவு புத்திசாலி என்பதை உங்களால் சொல்ல முடியும். --டினா ஃபே
- யாருடைய மனம் தன்னைத்தானே கவனிக்கின்றதோ அவரே புத்திசாலி. --ஆல்பர்ட் காமுஸ்
- ஒரு அரிதான புத்திசாலியை நாம் சந்தித்தால், அவர் என்ன புத்தகங்களைப் படிக்கிறார் என்று நாம் அவரிடம் கேட்க வேண்டும். --ரால்ப் வால்டோ எமர்சன்
- புத்திசாலியாக இருப்பது பதில்கள் இல்லாத நிறைய கேள்விகளை உருவாக்குகிறது. --ஜானிஸ் ஜோப்ளின்
- புத்திசாலித்தனத்தின் செயல்பாடுகளில் ஒன்று, புத்திசாலித்தனத்தை மட்டுமே நம்புவதால் வரும் ஆபத்துகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வது. --லூயிஸ் மம்ஃபோர்ட்
- உங்கள் புத்தி குழப்பமடையக்கூடும், ஆனால் உங்கள் உணர்ச்சிகள் ஒருபோதும் பொய் சொல்லாது. --ரோஜர் ஈபர்ட்
- முட்டாள்தனமான பெண்களுடன் நீங்கள் நிறைய புத்திசாலி ஆண்களைப் பார்க்கிறீர்கள், ஆனால் ஒரு முட்டாள்தனமான ஆணுடன் ஒரு புத்திசாலிப் பெண்ணை நீங்கள் அரிதாகவே பார்க்கிறீர்கள். --எரிகா ஜாங்
- வாழ்க்கையில் இலக்கு வைக்க வேண்டிய இரண்டு விடயங்கள் உள்ளன: முதலாவது நீங்கள் விரும்பியதை அடைவது, இரண்டாவது அதை அனுபவிப்பது. புத்திசாலித்தனமான மனிதர்கள் மட்டுமே இரண்டாவதை அடைகிறார்கள். --லோகன் பியர்சல் ஸ்மித்
- நீங்கள் வாழ்க்கையில் சாதிக்க விரும்பினால், நீங்கள் தான் அதைச் செய்ய வேண்டும், நீங்கள் திறமைசாலியாகவும் புத்திசாலியாகவும் இருந்தால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள். --ஜூலியானா ஹாட்ஃபீல்ட்
- புத்திசாலித்தனத்தின் காரணமாக நான் ஒரு அவநம்பிக்கையாளர், ஆனால் விருப்பத்தின் காரணமாக நான் ஒரு நம்பிக்கையாளர். --அன்டோனியோ கிராம்சி
- மனித வளர்ச்சிக்கு எல்லைகளே இல்லை, ஏனெனில் மனிதனின் புத்திசாலித்தனம், கற்பனை மற்றும் அதிசயத்திற்கு எல்லைகளே இல்லை. --ரொனால்ட் ரீகன்
- புத்திசாலிகளைப் போல சிந்தியுங்கள், ஆனால் சாதாரண நபர்களைப் போல பேசுங்கள். --அரிஸ்டாட்டில்
- ஞானம் இல்லாத ஒரு புத்திசாலி மனிதன், வாசனை இல்லாத ஒரு அழகான பூவைப் போன்றவன். --லியோனார்டோ டா வின்சி
- அறிவாற்றல் என்பது புத்திசாலித்தனம் அல்ல என்பதை நன்கு அறிந்துகொள்ளுங்கள். அறிவார்ந்தவராக இருப்பது போலியானது, இது ஒரு போலித்தனமான புத்திசாலித்தனம். அது உண்மையானதல்ல ஏனெனில் அது உங்களுடையது அல்ல, அது கடன் வாங்கப்பட்டது. புத்திசாலித்தனம் என்பது உள் உணர்வின் வளர்ச்சி. அறிவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அது தியானத்துடன் சம்பந்தப்பட்டது. --ஓஷோ
- ஒரு புத்திசாலி தனது நம்பிக்கைகளை ஆதாரத்துடன் பகிர்ந்து கொள்கிறான். --டேவிட் ஹியூம்
- புத்திசாலிகளுக்கு வாழ்க்கை ஒரு கனவு, முட்டாள்களுக்கு வாழ்க்கை ஒரு விளையாட்டு, பணக்காரர்களுக்கு வாழ்க்கை ஒரு நகைச்சுவை, ஏழைகளுக்கு வாழ்க்கை ஒரு சோகம். --ஷோலெம் அலிச்செம்
- இந்த உலகம் இரண்டு வகையான மனிதர்களைக் கொண்டுள்ளது, மதம் இல்லாத புத்திசாலிகள், மற்றும் புத்திசாலித்தனம் இல்லாத மதவாதிகள். --அபு அல்-அலா அல்-மாரி
- உங்கள் நேரத்திற்கு ஒரு வரையறை உண்டு. ஒவ்வொரு கணத்தையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள். --மார்கஸ் அரேலியஸ்