அழகைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்
அழகைப் பற்றிய பொன்மொழிகள்
அழகு (Beauty) இது தெய்வத்தின் மொழி ஆனால் உண்மையில் அழகு என்பது என்ன, உடல்த் தோற்றமா? அல்லது உள்ளத்தின் தோற்றமா? வயதுக்கு ஏற்ப எங்கள் கண்களுக்கு அழகு தரும் விடயங்களும் மாறுபடுகின்றன. சிறு வயதில் பூக்களும் பட்டாம்பூச்சிகளும் அழகாகத் தெரிகின்றன, ஆனால் இளமையில் பெண்களும் அவர்களின் இரண்டு கண்களுமே அழகாகத் தெரிகின்றன.
முகத்தின் அழகால் பிறர் உள்ளத்தில் இடம் பிடிக்கலாம், ஆனால் அவர் உள்ளத்தில் நிரந்தரமாக வசிக்க அகத்தின் அழகே அவசியம். பிறரின் ஆன்மாவைக்கூட அசைத்துப் பார்க்கும் சக்தி உங்கள் உள்ளத்திற்கே உண்டு. "காதலுக்குக் கண்கள் இல்லை" என்பார்கள் இதுவே அன்பின் சக்தி, அன்பான கண்களுக்குக் காணும் யாவுமே அழகுதான்.
கண்ணுக்குள் காதல் வந்தால், நெஞ்சுக்குள் பாசம் வரும், நெஞ்சுக்குள் பாசம் வந்தால், பார்க்கும் யாவுமே பேரழகாகத்தான் தெரியும். நமக்குப் பிடித்தவர்களிடம் உள்ள அழகான விடயங்களை மட்டும் பார்ப்பதும், நமக்குப் பிடிக்காதவர்களிடம் உள்ள குறைகளை மட்டும் பார்ப்பதுமே நாம் செய்யும் சிறு தவறு. அகத்தாலும் புறத்தாலும் நாம் அனைவரும் பேரழகே. உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் அறிஞர்களின் அழகு (Beauty) பற்றிய பொன்மொழிகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Beauty quotes in Tamil
- அழகைக் கண்டு திகைக்காதீர்கள், ஆனால் என்றும் நீடித்திருக்கும் அந்த உள்ளார்ந்த குணங்களைத் தேடுங்கள். --செனிக்கா
- அழகு என்பது உண்மையில் கடவுளின் சிறந்த பரிசு. ஆனால் நல்லவர்கள் அதை சிறந்த ஒன்று என நினைக்கக்கூடாது என்பதற்காக, கடவுள் அதை கெட்டவர்களுக்கும்கூட கொடுத்துள்ளார். --செயிண்ட் அகஸ்டின்
- அழகாக இருத்தல் என்பது நீங்கள் நீங்களாகவே இருத்தல். மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். --நட் ஹன்
- அழகு ஒரு அழகிய மலர். ஒழுக்கமே அதன் வாசனை. --ஜியோவானி ருபினி
- ஒவ்வொரு அழகுக்கும் அதைப் பார்க்க எங்காவது ஒரு கண் இருக்கிறது. ஒவ்வொரு உண்மைக்கும் அதைக் கேட்க எங்காவது ஒரு காது இருக்கிறது. ஒவ்வொரு அன்பிற்கும் அதைப் பெற எங்காவது ஒரு இதயம் இருக்கிறது. --இவான் பானின்
- அழகு என்பது நீங்கள் உள்ளத்தில் எப்படி உணர்கிறீர்கள் என்பதாகும், மேலும் அது உங்கள் கண்களில் பிரதிபலிக்கிறது. அழகு உடல் ரீதியானது அல்ல. --சோபியா லோரன்
- அழகு என்பது சிறந்த தோற்றத்தைப் பற்றியது அல்ல. அது உங்கள் தனித்தன்மையைக் கொண்டாடுவதைப் பற்றியது. --பாபி பிரவுன்
- அழகு ஆன்மாவைச் செயல்ப்படத் தூண்டுகிறது. --டான்டே அலிகேரி
- அழகு ஒரு சக்தி, புன்னகையே அதன் வாள். --ஜான் ரே
- மனிதர்கள் கறைபடிந்த கண்ணாடி யன்னல் போன்றவர்கள். சூரியன் உதிக்கும் போது அவை பிரகாசிக்கின்றன. ஆனால் இருள் சூழும் போது அங்கே உள்ளொளி இருந்தால் மட்டுமே அதன் உண்மையான அழகு வெளிப்படும். --எலிசபெத் குப்லர்-ரோஸ்
- மகிழ்ச்சியைப் போன்ற அழகுசாதனப்பொருள் இங்கே இல்லை. --மரியா மிட்செல்
- நேர்மை அழகை வெளிப்படுத்துகிறது. --தாமஸ் லியோனார்ட்
- அழகு தற்காலிகமானது, ஆனால் உள்ளம் உங்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். --அலிசியா மச்சாடோ
- அனைத்திலும் அழகு உள்ளது, ஆனால் எல்லோரும் அதைப் பார்ப்பதில்லை. --கன்பூசியஸ்
- உங்களுக்குள் அன்பு வளரத் தொடங்கியதில் இருந்து, அழகு வளர்கிறது. அன்பு என்பது ஆன்மாவின் அழகு. --செயிண்ட் அகஸ்டின்
- பண்பை விட அழகு குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தது. --யூஜின் ஆர்மண்டி
- அழகு மதுவை விட மோசமானது, அது அதை வைத்திருப்பவர் மற்றும் பார்ப்பவர் இருவரையும் போதைக்குள்ளாக்குகிறது. --ஆல்டஸ் ஹக்ஸ்லி
- ஒரு பெண்ணின் அழகை அவள் கண்களில் பார்க்க வேண்டும், ஏனெனில் அது அவளுடைய இதயத்தின் வாசல், அன்பின் வசிப்பிடம். --ஆட்ரி ஹெப்பர்ன்
- அழகு ஒரு உடையக்கூடிய பரிசு. --ஓவிட்
- அழகாக பிறப்பதில் தனிப்பட்ட சாதனை எதுவும் இல்லை. --லோரெட்டா யங்
- அழகில் குறைபாடு இல்லாதிருத்தல் ஒரு குறைபாடு. --ஹேவ்லாக் எல்லிஸ்
- அழகு மட்டுமே போதாது என்பதால், இன்னும் ஏதாவது இருக்க வேண்டும். --ஈவா ஹெர்சிகோவா
- அழகாக இருப்பது எளிது, அழகாதத் தோற்றமளிப்பது கடினம். --ஓசியா பல்லூ
- நான் சிறுமியாக இருந்தபோது நான் அழகாக இருக்கிறேன் என்று என்னிடம் யாரும் கூறவில்லை, எல்லாச் சிறுமிகளுக்கும் அவர்கள் அழகாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் அழகானவர்கள் என்று கூறப்பட வேண்டும். --மர்லின் மன்றோ
- மிக அழகான விடயங்கள் பூரணமானவை அல்ல, அவை சிறப்பானவை. --பாப் மார்லி
- அழகின் குணப்படுத்தும் ஆற்றலை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். --புளோரன்ஸ் நைட்டிங்கேல்
- அழகு என்பது பார்ப்பவரின் கண்களில் உள்ளது. --பிளேட்டோ
- அனைவரும் ஒரே அச்சுக்குள் வார்த்து உருவாக்கப்பட்டிருந்தால், அழகு போன்ற எதுவும் இருக்காது. --சார்லஸ் டார்வின்
- அழகு உங்கள் கவனத்தை ஈர்க்கும். ஆளுமை உங்கள் இதயத்தை ஈர்க்கும். --ஆஸ்கார் வைல்ட்
- மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். --ஆஸ்கார் வைல்ட்
- உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளும் தருணத்தில், நீங்கள் அழகாக மாறுகிறீர்கள். --ஓஷோ
- அழகான ஒன்றைப் பார்க்கும் வாய்ப்பை இழக்காதீர்கள், ஏனெனில் அழகு என்பது கடவுளின் கையெழுத்து. --ரால்ப் வால்டோ எமர்சன்
- உண்மையான அழகு உண்மையான கல்வியில் உள்ளது. --சாய் பாபா